6.PERIYAR.DALIT YELUTHU


001.பெரியாரின் தலித் எழுத்து
002.ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்
003.இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது
004.தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்?
004.தீண்டாமை நீடித்திருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும்
005.சாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா?
006
001

பெரியாரின் தலித் எழுத்து

தலித் எழுத்து – வேதனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இது, தலித்தாகப் பிறந்தவர்களுக்கும், அவ்வாறு உணர்கின்றவர்களுக்குமே கைகூடும். பெண் விடுதலைக்காக ஓங்கி ஒலித்ததைப் போலவே, தீண்டத்தகாத மக்களின் உணர்வுகளை முற்றாகப் புரிந்து கொண்டதாலேயே – பெரியாரின் எழுத்து, தலித் எழுத்தைப் போல் அமைந்திருக்கிறது! "நாம்' "நம்மில் கீழ்த்தர மக்கள்' என்றெல்லாம் பெரியார் பிரித்துப் பார்த்து, தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று அவர் மீது கண்மூடித்தனமாக அவதூறுகளைச் சுமத்தினார்கள்; இன்னும் கூட "கிசு கிசு'த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய "சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூல் வெளிவருவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் கவனத்திற்குரியது. இப்புரட்சியாளர்கள் இணைந்த புள்ளியும் இதுவே.

Periyar "தலித் முரசு' 13ஆம் ஆண்டின் சிறப்புக் கட்டுரையாகபெரியாரின் "தலித் எழுத்தை' வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. "எவனெழுதினாலென்ன?' என்ற புனைப் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை – "குடிஅரசு' 25.10.1931 ஆதாரம் : "பெரியார் களஞ்சியம்', தொகுதி 25, பக்கம் : 102 – 114

சகோதரர்களே! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டுமென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.

இவை தவிர, நமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணறோ கிடையாது. நாம் எந்தக் குளத்தையாவது, கிணற்றையாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச்சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாக வேண்டும். நாம் குடி இருக்க வேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும் கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்து விடுமாம். நாம் வாழும் இடத்துக்கு, "சேரி' என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை செத்தை கொண்டு வந்து போட்டு வைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், அவற்றிற்குக் காவலாய் இருக்குமாம்!

நமக்கு வேலையோ தோட்டி வேலைதான் பாரம்பரியமாய் சொந்தமானது; மற்றும் ஊர் கூட்டி, மலம் அசிங்கம் முதலியவற்றை எடுத்துச் சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவதும், கழனி வயல் அப்புறப்படுத்துவதும், கழனி வயல் முதலியவைகளுக்கு குப்பை, செத்தை முதலியன கொண்டு போடுவதும் மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து, மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச் சேரும் வரையில் சுய வேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும் மற்றும் இதுபோன்றவற்றுடன், தப்புக் கொட்டுதல், செத்துப் போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின் மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக் கொள்ளுதல்; இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல் முதலிய காரியங்கள் செய்ய வேண்டியதும் நமது பிறப்புரிமையாகும்.

இவை ஒரு பக்கமிருந்தாலும் நம் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது, மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாய் இருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒன்று இரண்டு பள்ளிக் கூட வசதிகள் இருந்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கவும், பையனுக்கு சாப்பாடு போடவும் சவுகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங்களைப் பற்றி நினைக்கவே கூடாது. இவை தவிர, நமக்கு நாவிதன் கிடையாது. வண்ணான் கிடையாது. நாமாகத் துறை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால், அங்கு 20 பறையர் வீடு இருந்தால், அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடி மக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்ய வேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சை வாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாய் "பிச்சை போடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைச் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும்.

பிச்சைச் சோறு கேட்கும் சட்டி கூட முழுசாய் இருந்தால், அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்தில் பறையன் முழு சட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால், கிராமத்திற்குக் கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஓர் அய்தீகம் உண்டு. ஆதலால் நம்ம சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்குப் போக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்குப் பிச்சைச் சோறு போட மாட்டார்கள். ஏனெனில், பறையருக்குச் சோறு போட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போய் விடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக் கொள்கை உண்டு. அதென்னவென்றால், சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்குத் தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குழிவெட்டிப் புதைத்து விடும்படி செய்வதும் உண்டு. நமக்குப் பிச்சைச் சோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப் போனதையும், ஊசிப் போனதையும்தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடிப்போய்க் கொண்டு வந்து போடுவார்கள். நிற்க.

துணி விஷயத்திலும் இப்படித்தான். நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசு கிடையாது. கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக்காரர்கள் கட்டிக் கிழித்த கந்தலையே கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால், வேட்டியை இடுப்பில் முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டு கட்டக்கூடாது. மேலேயும் துணி போடக் கூடாது, பெண்கள் மார்பை மூடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் மற்றும் தங்கம், வெள்ளி, நகை போடக்கூடாது என்பதும், குடை பிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்பதும், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது என்பதுமான பல நிபந்தனைகளுண்டு.

இவ்வளவும் தவிர, தமிழ் நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது, அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும் குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம் மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது; உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்க மாட்டீர்கள். அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்' என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக் கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில்தான் எந்த ரோட்டிலும் இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் எவ்விதத் தொழிலும் செய்ய முடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு "தம்பிரானே தம்பிரானே' என்று கூப்பாடு போடவே – கூடும் சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டு

விட்டுப் போனால் – மாலையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத்தவிர எங்காவது வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும் மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளைக் கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால், அவர்கள் தெருவில் நடக்கும் போதே "ஹா' "ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வர வேண்டும். ஏனெனில், “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன், எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே விலகிக் கொள்ளுங்கள்'' என்று குறிப்புக் காட்டுவதற்காக, அதாவது மூலை முடுக்குகளில் மோட்டார் கார்கள் வரும்போது, எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது "ஹாரன்' ஊதுவது போல் சத்தம் போட வேண்டும். ஆனால், மோட்டார் மூலை முடக்குகளில் மாத்திரம் ஊதும்; இவர்களோ நேர் ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்கு தான் கீழ் ஜாதிக் காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டியதாகும்.

இவை தவிர, சமூகத் துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது, நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆக முடியாமலும், நாம் ஒரு தனித் தொழில் செய்து சுதந்திரமாயிருக்க முடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறு தொழிலில் போய்ச் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். எவ்வளவுதான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதானாலும் சுயராஜிய அரசியலில் பியூன் போலிஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம்.

ஸ்தல சுயாட்சிகளில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக்காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசியத் தலைவர்கள்' தயவு வைத்து கொடுத்தõல்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக்காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்குச் சமமாக அனேகம் பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப் போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது எட்டுக் கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக்குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்; மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம். உத்தியோகஸ்தர்களாக இருக்கின்றோம். பணக்காரர்களாய், மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1,000க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10,000க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 1,00,000க்கு ஒருவர் உண்டா? இதன் காரணமென்ன?

நாம் தானே இந்நாட்டின் பழம்பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்நாடகர் என்கின்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த "ஆதி' பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப்பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும், பூரண சுயேச்சை இருந்தாலும், சுயராஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டுவிட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிறார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் – அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல், அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நிற்க.

சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமல் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச் சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா, ஜப்பான்காரர்களிலாவது – தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகுகாலமாகவே அதற்கு இணங்கி, நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார் நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள் என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால், நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து – எல்லோரும் இந்துக்கள் என்றும், இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை.

பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும், சுயமரியாதையே பிரதானமானதாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து' விடுவார்கள்.

ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் "இந்து' என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய, வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை "இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ, அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ, ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு நாம் "சண்டாளப் பறையராய்' தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் – நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு, “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது'' என்று சொன்னால், அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று, “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது; என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது'' என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது'' என்று இண்டியன் பீனல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்டப் புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு விட்டதனாலேயே, அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை, மக்களிடம் இருந்தும் மாற்றிவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இது போலவே நான், இந்துக்களில் மற்றொரு சாரார், தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரரென்றால் ஆத்திரம் கொண்டடி'' என்றும் சொல்லுகிறார்கள்; எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.

அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.

திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது).

திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை.

ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.

அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார்.

இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!

002

பாபாசாகேப் பேசுகிறார்

ஜாதி மீது பற்று இருப்பவன் தீண்டாமையை எதிர்க்க மாட்டான்
அம்பேத்கர்
Ambedkar இந்து சமூக சீர்திருத்தவாதிகளில் மிதவாதிகளின் பிரிவு ஒன்று உள்ளது. இந்தப் பிரிவினர், தீண்டாமை என்பது சாதி முறையிலிருந்து வேறுபட்டது என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தைப் பின்பற்றி இவர்கள் சாதி முறையைத் தாக்காமலேயே தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று கருதுகிறார்கள். மத உணர்வுள்ள இந்து, சாதி முறையை ஒழிப்பதற்கு எதிராக இருப்பது போலவே, தீண்டாமையை ஒழிப்பதற்கும் எதிராகவே இருக்கிறார். சமூக சீர்திருத்தத்தை ஒரே கட்டமாக நடத்துவதை எதிர்ப்பதைப் போலவே, இரண்டு கட்டமாக நடத்துவதையும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அரசியல் ஈடுபாடு கொண்ட இந்துவுக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஓர் இந்து தான் உண்மையில் நடந்து கொள்வதைவிட மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று உலக அரங்கில் காட்டிக் கொள்வதற்கு இது வாய்ப்பளிக்கிறது. இரண்டாவதாக, சாதியை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் சாதி இந்துக்கள் காங்கிரசைக் கைவிட்டுவிடும் ஆபத்து இருக்காது.

சாதி முறைக்குத் தீங்கு இல்லாமல் தீண்டாமையை ஒழிக்க விரும்புவோர், மநுஸ்மிருதி பத்தாம் அத்தியாயம் நான்காம் சுலோகத்தைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். இந்த சுலோகத்தில் மநு, நான்கு வர்ணங்கள்தான் உண்டு என்றும், அய்ந்தாவது வர்ணம் இல்லை என்றும் கூறுகிறார். இந்த சுலோகத்தின்படி, தீண்டத்தகாதவர்கள் நான்காம் வர்ணத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் சூத்திரர்களில் ஒரு பகுதியினர் என்றும், சூத்திரர்களைத் தொடுவதற்குத் தடை இல்லாததால் – தீண்டத்தகாதவர்களைத் தொடுவதற்கும் தடை இருக்க முடியாது என்று பொருள் கூறப்படுகிறது. அரசியல் ஈடுபாடு உள்ள இந்துவுக்கு இவ்வாறு பொருள் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், இது மநு கூற விரும்பும் கருத்துக்குப் பொருந்துவதாக இல்லை.

இந்த சுலோகத்துக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூற முடியும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே உள்ள இந்த சமுதாயங்களை, அய்ந்தாம் வர்ணமாக ஏற்றுக் கொண்டு, சதுர்வர்ண முறையைப் பஞ்சவர்ண முறையாக விரிவுபடுத்த மநு தயாராக இல்லை என்பதும் இதன் பொருளாக இருக்க முடியும். அய்ந்தாம் வர்ணம் இல்லை என்று அவர் கூறுவதன் பொருள், இந்த சமுதாயம் நான்கு வர்ணங்களுக்கு பதில் அய்ந்து வர்ணங்களைக் கொண்டதாகச் செய்வதன் மூலம், நான்கு வர்ணங்களுக்கு வெளியில் உள்ள மக்களை இந்து சமூகத்தில் இணைத்துவிட விரும்பவில்லை என்பதேயாகும். அவர் கூற விரும்பிய கருத்து இதுதான் என்பது, ‘பாஹ்யர்கள்' அல்லது ‘வர்ண பாஹ்யர்கள்' என்ற ஒரு பிரிவைப் பற்றி அவர் பேசுவதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எல்லா மக்களையும் நான்கு வர்ணங்களுக்குள் சேர்த்துக் கொள்ள மநு விரும்பியிருந்தால், சிலரை ‘வர்ண பாஹ்யர்கள்' என்று பேச காரணம் இல்லை. உண்மையில் வர்ண பாஹ்யர்களில் இரண்டு உட்பிரிவுகளை அவர் குறிப்பிடுகிறார். இந்த உட்பிரிவுகளை ‘ஹீனர்கள்' என்றும் ‘அந்த்யோவாசின்கள்' என்றும் அவர் அழைக்கிறார். இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மநுஸ்மிருதி சுலோகத்துக்குக் கூற முயலும் பொருள், தீவிர மதப் பற்றுள்ள இந்துவை ஏமாற்றிவிட முடியாது. தீண்டாமையைப் பின்பற்றுவது மநுஸ்மிருதிக்கு முரணானது என்றும், அதை ஒழிப்பது இந்து மதக் கோட்பாடுகளுக்கு முரணானது அல்ல என்றும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

மநுஸ்மிருதிக்கு இவ்வாறு பொருள் கூறி எடுத்து வைக்கப்படும் வாதம், கல்வியறிவில்லாத சாதாரண இந்துவுக்குப் புரியாத அளவுக்கு அறிவு நுட்பம் வாய்ந்தது. அவருக்குத் தெரிந்தது, சமூக உறவுகளில் தாம் பின்பற்ற வேண்டிய மூன்று தடைகள் உள்ளன என்பதே. இந்தத் தடைகள் : 1. சேர்ந்து உண்ணக் கூடாது 2. கலப்புத் திருமணம் செய்யக் கூடாது 3. சில வகுப்பு மக்களைத் தொடக் கூடாது. முதல் இரண்டு தடைகளும் சாதிப் பிரிவினையாகும்; மூன்றாவது தடை தீண்டாமையாகும். சாதி இந்துவுக்குத் தடைகளின் எண்ணிக்கை பற்றிக் கவலையில்லை. தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதில் அவர் குறியாயிருக்கிறார். தடையைப் பின்பற்ற வேண்டாம் என்று அவரிடம் கூறினால், ஏன் வேண்டாம் என்று அவர் திருப்பிக் கேட்கிறார்.

அவருடைய வாதம் இதுதான் : முதல் இரண்டு தடைகளையும் நான் பின்பற்றலாம் என்றால், மூன்றாவது தடையைப் பின்பற்றுவதில் என்ன தவறு? உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும்.

இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன, சேர்ந்தேதான் அவை வீழும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் 94)


    003




இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.


(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)


004
தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்?

தலித் இந்து மதம் தீண்டாமை
இந்தியாவின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசிக்கிறார்கள். இது ஊரறிந்த இரகசியம். இந்த மக்களைப் பற்றி ஆழமாக அறிந்திராதவர்களுக்குக் கூட இது நன்கு தெரியும். எனினும் ஒரு திருப்திகரமான பதிலளிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்று இதனை எவருமே எடுத்துக் கொள்ளாததுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது; வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியே வாழும்படி எவ்வாறு நேர்ந்தது? அவர்கள் முதலில் தீண்டப்படாதவர்களாக அறிவிக்கப்பட்டு, பிறகு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்களா? கிராமத்திற்கு வெளியே வசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்களா? அல்லது ஆரம்பத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசித்து வருகிறார்களா? பின்னர்தான் தீண்டப்படாதவர்களாகப் பிரகடனம் செய்யப்பட்டார்களா? துவக்கத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசிக்கிறார்கள் என்பது இக்கேள்விகளுக்குப் பதிலாக இருக்குமானால் இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு என்ன காரணம்?

தீண்டப்படாதவர்கள் தனித்து ஒதுங்கி வாழும் பிரச்சினை இதற்கு முன்னர் என்றுமே எழுப்பப்பட்டதில்லை; எனவே, தீண்டப்படாத மக்கள் கிராமத்திற்கு வெளியே எவ்வாறு வசிக்க நேர்ந்தது என்பது பற்றி இயல்பாகவே ஊகக்கோட்பாடு ஏதும் இல்லை. ஆனால் இந்து சாத்திரங்கள் இத்தகைய ஒதுக்கலை ஆதரிக்கவே செய்கின்றன; இதற்கு ஒரு கோட்பாடு அந்தஸ்து கொடுக்க ஒருவர் விரும்பினால் அவ்வாறே செய்யலாம். அந்த்யஜாக்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசிக்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன என்பதில் ஐயமில்லை. உதாரணமாக மனு பின்வருமாறு கூறுகிறார்:

X51. சண்டாளர், ஸ்வபாக்களும் கிராமத்திற்கு வெளியே தான் வசிக்க வேண்டும், அவர்கள் அபபத்ராக்களாக்கப் படவேண்டும், நாய்களும் குரங்குகளும்தான் அவர்களுடைய செல்வம்.

X52. பிணங்களின்மீது போர்த்தப்பட்ட துணிமணிகளே அவர்களது ஆடைகள். மிச்சம் மீதமான பதார்த்தங்களே அவர்களது உணவு, இரும்பாலானவையே அவர்களது அணிமணிகள், அவர்கள் எப்போதும் ஒவ்வொர் இடமாக அலைந்து திரிய வேண்டும்.

X53. சமயக் கடமையைப் பூர்த்திசெய்யும் எவரும் அவர்களுடன் கலந்து பழகக்கூடாது; கொள்வினை கொடுப்பினைகளை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும், திருமணங்களைத் தங்களை ஒத்தவர்களுக்குள்ளேயே செய்து கொள்ள வேண்டும்.

X54. அவர்களது உணவை ஓர் உடைந்த தட்டில் மற்றவர்கள்தான் தரவேண்டும்; இரவு நேரங்களில் அவர்கள் கிராமங்களிலோ நகரங்களிலோ நடமாடக்கூடாது.

X55. பகலில் தங்கள் பணியைச் செய்ய அவர்கள் வெளியே செல்லலாம், மன்னரின் கட்டளையின் பேரில் அவர்கள் அடையாளச் சின்னங்களைத் தரித்திருக்க வேண்டும், உறவினர்கள் எவரும் இல்லாதவர்களது பிணங்களை அவர்கள் தூக்கிச் செல்லவேண்டும்; இது நிர்ணயமான விதிமுறையாகும்.

X56. அரசனின் ஆணையின்பேரில் சட்டப்படி குற்றவாளிகளை அவர்கள் தூக்கிலிட வேண்டும், இத்தகைய குற்றவாளிகளது ஆடைகள், படுக்கைகள், அணிமணிகள் முதலியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.”

சாஸ்திரங்களின் இந்தக் கூற்றுகளிலிருந்து ஒருவர் என்ன முடிவுக்கு வரமுடியும்? இவற்றுக்கு இரட்டை அர்த்தம் கொள்ள வாய்ப்பு உண்டு. தீண்டப்படாதவர்கள் இதுவரை கிராமத்துக்கு வெளியே இருந்து வந்ததைப் போன்றே இனியும் இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஓர் அர்த்தம் கொள்ளலாம். மற்றொரு அர்த்தம் தீண்டத்தகாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று வெளியே வசிக்க வேண்டும் என்பதாகும். இரண்டு அர்த்தங்கள் தொனிக்கும் சாஸ்திரங்களின் கூற்றுகளைக் கொண்டு பார்க்கும்போது, இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. முதலாவது சாத்தியக்கூறு: தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை; ஆரம்பம் முதலே அவர்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசித்துவந்தார்கள். அதன் பின்னர் தீண்டாமை என்னும் வடு அவர்களுக்கு நேர்ந்தபோது, கிராமத்திற்குள் நுழைய முடியாதபடி அவர்கள் தடை செய்யப்பட்டார்கள். இரண்டாவது சாத்தியக்கூறு: தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எல்லா வகையிலும் சம்பந்தம் உண்டு. வேறுவிதமாகச் சொன்னால், ஆரம்பத்தில் தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்குள்தான் வசித்து வந்தார்கள், அதன்பின்னர் தீண்டாமை கறை அவர்களுக்கு ஏற்பட்டபோது, கிராமத்திலிருந்து காலிசெய்து வெளியே வசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இந்த இரு சாத்தியக்கூறுகளில் எது ஏற்கத் தக்கது?

முதல் சாத்தியக்கூறு அபத்தமானதும், நகைப்புக்கிடமானதும், வியப்புக்குரியதுமாகும். நாம் இங்கு விவாதிக்கும் விஷயம் தனி ஒரு கிராமத்தையோ அல்லது பிரதேசத்தைப் பற்றியதோ அல்ல. இந்தக் காட்சியை இந்தியா முழுவதிலும் காண்கிறோம். தீண்டப்படாதவர்களை கிராமத்திலிருந்து கிராமத்துக்கு வெளியே குடியமரச் செய்வது என்பது மிகப் பரந்த நடவடிக்கையாகும். இத்தகைய பிரமாண்ட பரிமாணங்களை உடைய ஒரு நடவடிக்கையை எப்படி, யார் மேற்கொண்டிருக்க முடியும்? ஒரு மாபெரும் சக்தியாலன்றி இத்தகைய ஒரு குடிபெயர்வு சாத்தியமல்ல. ஆனால் சாத்தியமோ, சாத்தியமில்லையோ இது ஒரு சக்கரவர்த்தியின் சாதனையாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய சாதனைக்கான நன்மதிப்பையோ அவமதிப்பையோ பெறக்கூடிய அந்தச் சக்கரவர்த்தி யார்? அந்த அருஞ்செயலைப் புரியக்கூடிய சக்கரவர்த்தி யாரும் இந்தியாவில் இல்லை. அவ்வாறாயின் இரண்டாவது சாத்தியக்கூறைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுபவர்கள் தீண்டப்படாதவர்களாவதற்கு முன்பே ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர்; பின்னர் தீண்டாமை பழி அவர்கள் மீது சுமத்தப்பட்டபோது, வேறுவழியின்றி கிராமத்துக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து வசிக்கவேண்டியதாயிற்று. இதுதான் நமது பரிசீலனைக்குரிய ஒரே சாத்தியக்கூறாகத் தோன்றுகிறது. ஆனால் இது ஒரு சிக்கலான, கடுமையான கேள்வியை எழுப்புகிறது. அவர்கள் ஏன் கிராமத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார்கள்? அவ்வாறு செய்யும்படி அவர்களை நிர்ப்பந்தித்தது என்ன? உலகெங்கும் பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாறுவதற்குத் துணைபுரிந்த அம்சங்களைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் தொடக்கக்காலம் முதலே கிராமத்திற்கு வெளியேதான் வசித்து வந்திருக்கிறார்கள் என்று அனுமானிப்பது முற்றிலும் இயல்பே.

பூர்வீக சமுதாயத்தை நவீனகால சமுதாயமாக மாற்றிய காரணிகளைப் பற்றி விளக்கிக் கூறாமல் இது இயல்பானதே என்று மொட்டையாகக் கூறுவதை பலரால் புரிந்துகொள்ளமுடியாது. இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், நவீனகால சமுதாயம் பூர்வீக சமுதாயத்திலிருந்து இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது. பூர்வீக சமுதாயத்திலிருந்து இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது. பூர்வீக சமுதாயம் நாடோடி சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ குடியமர்ந்த சமூகங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பூர்வீக சமுதாயம் குருதி உறவு கொண்ட குலமரபு சமூகங்களை கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ பிரதேச பற்றுதல் கொண்ட ஸ்தல சமூகங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. வேறுவிதமாகக் கூறினால் பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாறுவதற்கு முன்னர் இரு பரிணாம வளர்ச்சி மார்க்கங்களை மேற்கொண்டது. ஒரு பரிணாம வளர்ச்சி மார்க்கம் பூர்வீக சமுதாயத்தை குலமரபு குழுவிலிருந்து பிரதேசக் குழுவாக மாற்றியிருக்கிறது. இத்தகைய ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் எத்தகைய ஐயமும் இருப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன என்பதற்கு மன்னர்கள் தங்களுக்குப் பதவிப்பெயர்கள் சூட்டிக்கொள்ளும் பாணியிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கில மன்னர்கள் கைக்கொண்ட பாணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஜான் மன்னர்தான் முதன்முதலில் தம்மை இங்கிலாந்தின் அரசன் என்று அழைத்துக் கொண்டவர். அவருக்கு முந்தைய அரசர்கள் அனைவரும் ஆங்கிலேய மன்னர்கள் என்றே தங்களைப் பொதுவாக அழைத்துக் கொண்டனர். முந்தையவர் ஒரு பிரதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பிந்தையவர் குலமரபுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இங்கிலாந்து ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் தங்கிவாழ்ந்த இடமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தற்போது இங்கிலாந்தை வாழ்விடமாகக் கொண்ட மக்களாக இருக்கின்றனர். இதே போன்றதொரு மாற்றம் பிரெஞ்சு மன்னர்கள் விஷயத்திலும் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பிரெஞ்சு மன்னர்கள் ஒரு சமயம் தங்களை பிராங்குகளின் மன்னர்கள் என்று கூறிக்கொண்டனர். பிற்காலத்தில் பிரான்சின் மன்னர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இரண்டாவது பரிணாம வளர்ச்சியானது பூர்வீக சமுதாயத்தை ஒரு நாடோடி சமூக நிலையிலிருந்து குடியமர்ந்த சமூக நிலைக்கு இட்டுச் சென்றது. இங்கு மாற்றம் திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது; இந்த எதார்த்தத்தை எவருக்கும் மெய்ப்பித்துக் காட்டுவதற்கு விளக்கம் ஏதும் அளிக்கப்பட வேண்டியதில்லை.

நாம் மேற்கொண்டுள்ள நோக்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டாவது பரிணாம வளர்ச்சியைப் பரிசீலிப்பதோடு நிறுத்திக் கொள்வது போதும் என்று கருதுகிறோம். பூர்வீக சமுதாயம் எவ்வாறு ஒரு குடியமர்ந்த சமூகமாக மாறிற்று? இது ஒரு பெரிய கதை. இந்த நீண்டகதையை ஓர் அத்தியாயத்தில் அல்லது அதன் ஒரு பகுதியில் சுருக்கிக் கூறுவது என்பது சாத்தியமல்ல. இப்போதைக்கு இரண்டு விஷயங்களைக் கவனத்திற்கொண்டால் போதுமானது. நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் பூர்வீக சமுதாயம் தனது நாடோடி வாழ்க்கையை கைவிடும்படி செய்தது எது; இரண்டாவது விஷயம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமர்ந்த வாழ்க்கைக்கு மாறிச் சென்ற காலத்தில் என்ன நிகழ்ந்தது.

பூர்வீக சமுதாயம் நாடோடிச் சமுதாயமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நாடோடிச் சமுதாயமாக இருந்ததற்கு அதன் உள்ளார்ந்த உற்றுணர்வு, இயற்றூண்டுதல் காரணமல்ல. அதேபோன்று அதன் தனித்த மனப்பண்பு எதுவும் காரணமல்ல. மாறாக, பூர்வீக சமுதாயத்தின் மிக ஆரம்பக்காலச் செல்வம் கால்நடைகள் வடிவத்தில் இருந்ததன் விளைவே இது. பூர்வீக சமுதாயம் நாடோடிச் சமுதாயமாக இருந்தது என்றால், அதன் செல்வம் அதாவது அதன் கால்நடைகள் எப்போதும் இடம்விட்டு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்ததே காரணம். கால்நடைகள் புதிய மேய்ச்சல் நிலங்களை நாடி, தேடிச் சென்றுகொண்டிருந்தன. பூர்வீக சமுதாயத்திற்குத் தனது கால்நடைகள் மீது உயிர், கொள்ளை பாசம். எனவே, கால்நடைகள் சென்ற இடங்களுக்கெல்லாம் அவற்றைப் பின்பற்றியே அது சென்றுகொண்டிருந்தது. எனினும் விரைவிலேயே ஒரு புதுவகையான செல்வம் கண்டுபிடிக்கப்பட்டபோது, பூர்வீக சமுதாயம் ஓர் இடத்தை, உறையுள்ளை நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது, அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அது ஒரு குடியமர்ந்த சமுதாயமாகப் பரிணமித்தது. இவ்வாறு அதன் கதிப்போக்கை மாற்றிய செல்வம்தான் நிலம். பூர்வீக சமுதாயம் நிலத்தை உழுது பண்படுத்தி பயிர் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டபோது இது நிகழ்ந்தது; இப்போது செல்வம் ஒரே இடத்தில் நிலைத்து நின்றது. அதன் வடிவம் கால்நடையிலிருந்து நிலமாக மாற்றமடைந்தது; இந்த மாற்றத்தைத் தொடர்ந்து பூர்வீக சமுதாயமும் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் சமுதாயமாக மாறிற்று.

பூர்வீக சமுதாயம் குடியமர்ந்த சமுதாயமாக மாறி வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகளை அடுத்து நாம் கவனிக்கவேண்டும். பூர்வீக சமுதாயம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமர்ந்த சமுதாயத்துக்கு மாறியபோது அதனை பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் எதிர்நோக்கின. ஒன்று குடியமர்ந்த சமூகம், மற்றொன்று சிதறுண்ட சமூகம். குடியமர்ந்த சமூகத்தை நாடோடி குலங்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பிரச்சினை எதிர்நோக்கிற்று. சிதறுண்ட சமூகத்தைப் பொறுத்தவரையில் தன்னைப் பராமரித்துக் கொள்ளும், புகலிடம் தேடும் பிரச்சினை எதிர்ப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் எவ்வாறு, ஏன் எழுந்தன என்பதை இங்கு விளக்குவது உசிதமாக இருக்கும்.

குடியமர்ந்த குலங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு பின்கண்டவற்றை மனத்திற் கொள்வது அவசியம், எல்லாக் குலங்களுமே ஒரே சமயத்தில் குடியமர்ந்த வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. சில குலமரபுக் குழுக்கள் ஓரிடத்தில் நிலையாக குடியமர்ந்தன. வேறு சில குழுக்கள் தொடர்ந்து நாடோடி வாழ்க்கையை பின்பற்றின. நாம் நினைவிற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், குலங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று சமாதானமாக, அமைதியாக வாழ்ந்ததில்லை. எப்போதும் அவை சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்தன. அனைத்துக் குலங்களும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவற்றினிடையே போர்கள் நிகழ்வதற்கு பின்வரும் மூன்று பிரதான காரணங்கள் இருந்தன: 1.கால்நடைகளைக் கவர்ந்து செல்லுவது 2.பெண்களைக் கடத்திச் செல்லுவது 3.மற்ற குலங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளைத் திருட்டுத்தனமாக மேயவிடுவது. சில குலங்கள் ஓரிடத்தில் குடியமர்ந்து நிலையான வாழ்க்கையை மேற்கொண்டபோது இன்னமும் தொடர்ந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த குலத்தினர் குடியமர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த குலத்தினர்மீது அடிக்கடி தாக்குதல் தொடுப்பது தங்களுக்கு மிகுந்த அனுகூலமாக இருப்பதைக் கண்டனர்; இதர நாடோடிக் குழுக்கள் மீது போர்த்தொடுப்பதை விட இது அவர்களுக்கு மிகவும் ஆதாயம் ஆளிப்பதாக இருந்தது. குடியமர்ந்த குலத்தினர் இரண்டு மடங்கு செல்வச்செழிப்பில் மிதப்பதை நாடோடிக் குலத்தினர் தெரிந்து கொண்டனர். நாடோடிக் குலத்தினரைப் போன்றே இவர்களிடம் ஏராளமான கால்நடைகள் இருந்தன. கால்நடைகள் மட்டுமன்றி, தானியமணிகள் மிகுந்திருந்தன. இவை நாடோடிக் குலத்தினரிடம் இல்லை. எனவே அவர்கள் தானிய மணிகள் மீது பெரிதும் நாட்டம்கொண்டிருந்தனர். குடியமர்ந்த குலத்தினரின் செல்வங்களைக் கவரும் நோக்கத்தோடு நாடோடி குலத்தினர் அவர்கள் மீது திட்டமிட்டு பல தாக்குதல்களைத் தொடுத்துவந்தனர். இதிலுள்ள மூன்றாவதொரு அம்சத்தை இங்கு குறிப்பிட வேண்டும். குடியமர்ந்த குலத்தினர் அதிக ஆதாயம் தரும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அவர்களால் தங்கள் கலப்பைகளை போர்வாளாக மாற்ற முடியவில்லை. தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி, திடீர் தாக்குதல் தொடுக்கும் குலத்தினரைத் துரத்திச் சென்று அவர்களுடன் பொருதவும் இயலவில்லை. இதில் விந்தை எதுவும் இல்லை. நாகரீகமடைந்த மக்கள் போதிய பாதுகாப்பு சாதனங்களும் வசதிகளும் இல்லாமையால், காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களைச் சமாளித்து நிற்க முடிவதில்லை என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. குடியமர்ந்த பிரிவினர் இடைப்பட்ட காலத்தில் தங்களைத் தற்காத்து கொள்ளும் பிரச்சினையை எப்படி, ஏன் எதிர்ப்பட்டனர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சிதறுண்ட குலத்தினரின் பிரச்சினை எவ்வாறு எழுந்தது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம் ஒன்றுமல்ல. ஆரம்பகட்டத்தில் பல்வேறு குலமரபுக் குழுவினரும் தங்களுக்குள் ஓயாது ஒழியாது போரிட்டுக் கொள்வது அவர்களுக்கு சகஜமாகிவிட்டது. இதிலிருந்து எழுந்ததே சிதறுண்ட குலத்தினரின் பிரச்சினை. ஒரு குலப்போரில் எந்த ஒரு குலத்தினரும் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவதில்லை; மாறாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட குலத்தினர் பல சந்தர்ப்பங்களில் துண்டுதுண்டாக சிதறுண்டு போயினர். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில் சிதறுண்ட குலத்தினர் அடங்கிய ஒரு பிரிவினர் எல்லாத் திசைகளிலும் சுற்றித் திரிந்தனர். சிதறுண்ட குலத்தினர் பிரச்சினை எழுவதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு பூர்வீக சமுதாயம் அடிப்படையில் ஒரு குலமரபு அமைப்பாக இருந்துவந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் பூர்வீக சமுதாயம் இவ்வாறு குலமரபு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது இரண்டு விஷயங்களைக் குறித்தது. முதலாவதாக, பூர்வீக சமுதாயத்தில் ஒவ்வொரு தனிநபரும் ஒரு குலமரபைச் சேர்ந்தவராக இருந்தான். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு அவன் ஒரு குலத்தைச் சேர்ந்தவனாக இருப்பது அவசியம். குலத்துக்கு வெளியே எந்தத் தனிநபரும் இருக்கமுடியாது. அவ்வாறு அவன் இருந்தால் சுத்த பூஜ்யம்தான். இரண்டாவதாக, குலமரபு அமைப்பானது பொதுக்குருதித்தொடர்பு, பொதுப்பண்பொற்றுமையின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு குலத்தில் சேர்ந்து அதன் அங்கமாக முடியாது. எனவே, சிதறுண்ட சமூகத்தினர் ஆங்காங்கு தனித்தனி நபர்களாகவே வாழ வேண்டியிருந்தது. ஒரு குலம் இன்னொரு குலத்தை எதிர்த்துப் போராடி வந்த பூர்வீக சமுதாயத்தில் சிதறுண்ட தனிநபர்களின் ஒரு திரள் இருந்து வருவதானது அத்திரள் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் எப்போதுமே இருந்துவந்தது. இந்நிலைமையில் எங்குபோய் புகலிடம் தேடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. யார் தங்களைத் தாக்குவார்கள் என்பதும், பாதுகாப்பாக யாரை நாடிச்செல்வது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் புகலிடம் தேடுவதும் பாதுகாப்பு நாடுவதும் சிதறுண்ட பிரிவினரின் பிரச்சினையாக உருவெடுத்தது.

பூர்வீக சமுதாயத்தின் பரிணாமம் குறித்த மேலே கண்ட தொகுப்பு எதைக் காட்டுகிறது? பூர்வீக சமுதாயத்தின் வாழ்க்கையில் இரண்டு குழுக்கள் இருந்து வந்ததைக் காட்டுகிறது. இவற்றில் ஒரு குழு குடியமர்ந்த குலங்களைக் கொண்டது; நாடோடி குலத்தைச் சேர்ந்த வம்புச் சண்டைக்காரர்களின் தாக்குதல்களுக்கு எதிராக இரவு பகல் காவல் செய்யும் ஒரு கூட்டத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பிரச்சினை இந்தக் குழுவின் முன் எழுந்தது. தோற்கடிக்கப்பட்ட குலங்களைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினருக்கோ வேறொரு பிரச்சினை; தங்களுக்கு உணவும் தங்கிடமும் தரக்கூடிய புரவலர்களை, காப்பாளர்களைத் தேடும் பிரச்சினை அவர்களுடையது.

இங்கு அடுத்த கேள்வி எழுகிறது: இவ்விரு குழுக்களும் தமது பிரச்சினைகளுக்கும் எவ்வாறு தீர்வு கண்டன? இரு தரப்புகளும் தமக்குள் ஒரு பேரம் செய்துகொண்டு, இப்பிரச்சினைகளுக்கு முடிவுகட்டின; இதன்படி குடியமர்ந்த குலத்தினருக்கு காவல் பணிபுரிய சிதறுண்ட பிரிவினர் ஒப்புக்கொண்டனர்; இதற்கு பிரதியாக இவர்களுக்கு உணவும் புகலிடமும் தருவதற்கு குடியமர்ந்த குலத்தினர் இணக்கம் தெரிவித்தனர். முக்கியமாக பரஸ்பரம் ஒருவர் ஒத்துழைப்பு மற்றவருக்குத் தேவைப்படும் நிலைமையில் இத்தகைய ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறானதாக இருந்திருக்கும்.

இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் ஒரு சிரமம் ஏற்பட்டிருக்கக்கூடும்; அதுதான் தங்கிடம் பற்றியது. சிதறுண்ட பிரிவினர் எங்கே தங்குவது? குடியமர்ந்த சமூகத்தினர் மத்தியிலா அல்லது அச்சமூகத்தினருக்கு வெளியேயா? இந்தப் பிரச்சினையைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் தீர்மானமான பங்காற்றியிருக்கக்கூடும். ஒரு விஷயம் குருதி உறவு சம்பந்தமுடையது. இரண்டாவது விஷயம் நடைமுறை உத்தி சம்பந்தப்பட்டது. பூர்வீக சமுதாயத்தில் நடைமுறையிலிருந்த விதிமுறைகளின்படி ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதாவது குருதி தொடர்புடைவர்கள்தான் ஒன்று சேர்ந்து வாழமுடியும். ஓர் அந்நியன் அந்தக் குலத்துக்குச் சொந்தமான வளாகங்களில் வசிக்கமுடியாது. சிதறுண்டவர்கள் அந்நியர்கள்; குடியமர்ந்த குலத்திலிருந்து வேறுபட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, குடியமர்ந்த குலத்தினர் மத்தியில் வசிப்பதற்கு அவர்களை அனுமதிக்க முடியாது. நடைமுறைத் தந்திரக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கினால்கூட இந்த சிதறுண்ட பிரிவினர் கிராமத்தின் எல்லையில் வசிப்பதுதான் உசிதமானது. அப்போதுதான் பகைக் குலங்களைச் சேர்ந்தவர்களின் தாக்குதல்களைச் சமாளிக்கமுடியும். இந்த இரண்டு அம்சங்களுமே அவர்களது குடியிருப்புகளைக் கிராமத்திற்கு வெளியே அமைப்பதில் தீர்மானமான பங்காற்றியிருக்கக்கூடும்.

தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கிறார்கள் என்ற பிரதான கேள்விக்கு இப்போது வருவோம். இந்தக் கேள்விக்கான பதிலை மேலே கண்ட விளக்கங்களிலிருந்து பெற முடியும். இந்து சமுதாயம் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து குடியமர்ந்த கிராம சமூக வாழ்க்கைமுறைக்கு மாறிக்கொண்டிருந்த போது இந்தியாவில் இதே நிகழ்வுக்போக்குகள் நடைபெற்றிருக்க வேண்டும். பூர்வீக இந்து சமுதாயத்தில் குடியமர்ந்த குலமரபுக் குழுக்களும், சிதறுண்ட பிரிவினரும் இருந்திருக்க வேண்டும். குடியமர்ந்த குலங்கள் கிராமத்தையும் கிராம சமூகத்தையும் உருவாக்கின. சிதறுண்ட பிரிவினர் வேறுபட்ட குலத்தையும் வேறுபட்ட குருதி உறவையும் கொண்டவர்களாதலால் கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர். இவ்வகையில் பார்க்கும்போது தீண்டப்படாதவர்கள்தான் ஆதியில் சிதறுண்ட பிரிவினராக இருந்தனர் என்று கூறலாம். அவர்கள் சிதறுண்ட பிரிவினராக இருந்தால்தான் கிராமத்துக்கு வெளியே வசித்தனர்.

ஆக, தீண்டப்படாதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியேதான் வசித்து வந்தனர், அவர்கள் கிராமத்துக்கு வெளியே வசித்ததற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று ஊகிப்பது முற்றிலும் இயல்பானதே என்பதே இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஊகம் மிகவும் புதுமையானதாக இருப்பதால் நமது விமர்சகர்கள் மேலும் சில கேள்விகளை எழுப்பாமல் திருப்தியடையமாட்டார்கள். அவர்கள் பின்வருமாறு கேட்பார்கள்:

தீண்டப்படாதவர்கள்தான் இந்த சிதறுண்ட பிரிவினர் என்று கூறுவதற்கு எதார்த்த பூர்வமான சான்று ஏதேனும் இருக்கிறதா?
மேலே கண்ட உடன்பாடு உண்மையில் எந்த நாட்டிலேனும் செய்து கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு ஆதாரம் உண்டா?
சிதறுண்ட பிரிவினர் கிராமத்துக்கு வெளியே வசிப்பது அனைத்து சமுதாயங்களிலும் காணப்பட்ட ஒரு பொது அம்சம் என்றால் இவர்களது தனிகுடியிருப்பு வட்டாரங்கள் இந்தியாவுக்கு வெளியே எங்கும் இல்லாதிருப்பதும் இந்தியாவில் மட்டும் அவை நீடித்திருப்பதும் ஏன்?


(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 3)

தீண்டாமை நீடித்திருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும்

காங்கிரஸ் இடஒதுக்கீடு தீண்டாமை
முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.

பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய "மகர்' படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு "இரக்கமுடன்' நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?

தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது. முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் "பார்கவா' மற்றும் "சச்சார்' ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள். பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.

இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், "காங்கிரஸ்காரர்' அல்லது "நாகரிக மனிதர்' என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.

தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே, நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.

நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

(27.10.1951ல் ஜலந்தரில் ஆற்றிய உரை)


#005
005 சாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா? சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு - அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்... ...அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு ‘இந்திய மக்கள்' என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்திய தேசம்' என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம். ஆனால், இத்தகைய உணர்வு நிலைக்கு வருவது மிகவும் கடினம். அமெரிக்காவில் வந்தது போன்ற நிலைக்கு வருவது கடினம். மேலும், அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப் பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும். நம் முன்னால் இருக்கும் சவால்கள் பற்றிய என்னுடைய பார்வை இது. இது, சிலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது. ஆனால், இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் என்பது, நீண்ட நாட்களாக ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. அதுமட்டுமல்ல; பெரும்பான்மை மக்கள் துன்பத்தைச் சுமந்து திரிந்தனர்; அவர்கள் அதற்கு இரையாகியும் போனார்கள். ஒரு சிலரின் ஆதிக்கம், அவர்களின் முன்னேற்றத்தைப் பறித்ததோடு, அவர்களின் முக்கிய வாழ்க்கையே மூழ்கிவிட்டது. இத்தகைய தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அடிமைகளாக இருந்து சோர்ந்து போய்விட்டனர். அவர்கள் மற்றவர்களால் ஆளப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே ஆள விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தன்னிலை உணர்ந்து, ஒரு வர்க்கப் போர் அல்லது போராட்டத்திற்குச் சென்றுவிடக் கூடாது. இதனால் நாட்டில் வேற்றுமைகள்தான் வளரும். அது ஒரு போரழிவுக்கான நாளாக அமைந்து விடும். ஆபிரகாம் லிங்கன் சரியாகச் சொன்னார்: "தங்களுக்குள்ளாகவே பிளவுபட்டுப் போராடும் ஒரு குடும்பம், நீண்ட நாட்கள் நீடித்திருக்காது.'' எனவே, இம்மக்களின் ஆதங்கம் எவ்வளவு சீக்கிரம் உணரப்படுகிறதோ, புரிந்து கொள்ளப்படுகிறதோ, ஆதிக்கம் செலுத்தும் அந்த சிலருக்கும், நாட்டுக்கும், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்கும், ஜனநாயகக் கூட்டமைப்பைத் தொடங்குவதற்கும் அது நல்லது. இது, வாழ்க்கையின் அனைத்துத் தளங்களில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதின் மூலமே சாத்தியமாகும். எனவேதான், நான் இதற்கு மிகுந்த அக்கறையும் அழுத்தமும் கொடுத்தேன். நான் இந்த அவையை மேலும் களைப்படைய வைக்கப் போவதில்லை. சுதந்திரம் என்பது, மகிழ்ச்சிக்கான ஒரு செய்தியே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நம்மீது பெரும் பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்று விட்டதால், இனிவரும் தவறுகளுக்கு நாம் ஆங்கிலேயர்களைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. இனி இங்கு நடைபெறும் தவறுகளுக்கு நம்மைத் தவிர வேறு எவரையும் குறைகூற முடியாது. பெரும் தவறுகள் நடக்கும் ஆபத்துள்ளது. நாட்கள் விரைந்து செல்கின்றன. புதுப்புது கொள்கைகளால் நம் மக்கள் உந்தப்படுகிறார்கள். அவர்கள் மக்களால் ஆளப்படும் அரசு என்பதில் சோர்வடைந்து விட்டனர். மக்களுக்கான அரசு அமைய அவர்கள் தயாராகி விட்டனர். மக்களால் மக்களுக்காக ஆளப்படும் அரசு என்று சொல்லப்பட்டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க விரும்பினால், நாம் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றப் பாதையில் உள்ள தீமைகளை அகற்றி, மக்களால் மக்களுக்கான அரசு அமைய மக்களைத் தூண்ட வேண்டும். நாட்டுக்குத் தொண்டாற்றுவதற்கு இதுதான் ஒரே வழி. இதைவிட மேலான வழி எனக்குத் தெரியவில்லை. 25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. #006

No comments:

Post a Comment

1

MT